சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மகான் திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸ் என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டத்தையோ பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையோ காண முடியவில்லை.
இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையை விக்ரம் எப்படி ஆட்சி செய்யப் போகிறார். கோப்ரா படத்தை பார்க்க முக்கியமான 5 காரணங்கள் என்ன என்ன என்று இங்கே பார்ப்போம்..
அஜய் ஞானமுத்து
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரு தரமான படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகி உள்ள படம் கோப்ரா. இயக்குநரின் பிரில்லியன்ட்டான ஸ்க்ரிப்ட் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களை கட்டிப் போட்டு 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 நொடிகள் உட்கார வைக்கும் என்பதை நம்பித்தான் அவர்களே கோப்ரா படத்தின் டூரேஷனை அப்படி வைத்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான்
தும்பித் துள்ளல், அதீரா, உயிர் உருகுதே பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்து விட்டன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு பெரிய படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் தாராளமாக அந்த படத்தை தியேட்டரில் பார்த்து விடுவது வழக்கமாகவே உள்ளது. இரவின் நிழல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள கோப்ரா படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஹீரோயின்கள்
கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், மீனாட்சி மற்றும் மிருணாளினி ரவி என இரு நடிகைகள் படத்தில் உள்ளனர். இளைஞர்களை என்டர்டெயின் செய்யும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் தாராளமாக இருக்கும் என்பதால் கோப்ரா படத்தை மிஸ் பண்ணாமல் தியேட்டரில் போய் பார்க்கலாம்.
இர்ஃபான் பதான் அறிமுகம்
இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதல் முதலாக கோப்ரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யாப்பை வில்லனாக போட்டு மிரட்டி இருந்தார் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் இண்டர்போல் அதிகாரியாக ஆக்ஷனில் மிரட்ட உள்ளார் இர்ஃபான் பதான்.
7 கெட்டப்புகளில் விக்ரம்
எல்லாவற்றுக்கும் மேலாக சியான் விக்ரம் படம் பல ஆண்டுகளுக்கு பின்னர் தியேட்டரில் வெளியாகிறது. இந்த படத்துக்காக வழக்கத்தை விட அதிகமாகவே தனது உடல் பொருள் ஆவியை கொடுத்து நடித்துள்ளார். 7 விதமான வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு கோப்ராவாக திரையரங்குகளை அதிர விட வருகிறான் இந்த அதீரா. கோப்ரா படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார். பேக் டு பேக் விக்ரமின் பெரிய படங்கள் வெளியாகும் நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் தனது இடத்தை விக்ரம் பிடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்!