புதுடெல்லி: சீன கடன் ஆப்களை தடை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான விசாரணையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் 1100 டிஜிட்டல் கடன் ஆப்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 600 ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுவதை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை 52 பேர் இதுபோன்ற இந்த கடன் ஆப்கள் மூலமாக மிரட்டல்களால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசு மற்றும் ஏஜென்சிகளின் திறமையின்மை காரணமாக இதுபோன்ற கடன் ஆப்களால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. சீன லோன் ஆப் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து ரூ.500 கோடியை ஹவாலா வழியில் பறித்துள்ளன. இதனை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடியும் இதில் கவனம் செலுத்தவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பேசுவதற்கு கூட பிரதமர் மோடி அரசுக்கு தைரியம் கிடையாது. சீன கடன் ஆப்களை உடனே தடை செய்ய வேண்டும்’’ என்றார்.