சென்னை: சென்னையில் 132 மாநகராட்சிப் பள்ளிகளில் 792 பாதுகாப்பான நவீன கழிவறைகளும், 159 பள்ளிகளில் வயது வந்த பெண்குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக நவீன கழிவறைகளும் கட்ட மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற திட்டம் மூலம் 425 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகள் கணக்கிடப்பட்டு 25 மாணவர்களுக்கு ஒரு கழிவறை என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு தேவையான எண்ணிக்கையில் கூடுதலாக கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக 18.87 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு கட்டங்களாக, சென்னை மாநகராட்சியின் 132, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்டப்பட உள்ளன.
மாநகராட்சியின் 159 பள்ளிகளில் வயது வந்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான 225 நவீன கழிப்பறை கட்டப்படவுள்ளன. இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில் முதல் தொகுதியில் முதற்கட்டமாக 6.52 கோடி ரூபாய் மதிப்பில் 100 பள்ளிகளிலும், இரண்டாம் கட்டத்தில் 7.27 கோடி ரூபாய் மதிப்பில் 91 பள்ளிகளிலும் கட்டப்பட உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தின் திட்டத்தின் கீழ், குற்றங்கள் அதிகம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு பணியை மேம்படுத்தி, பெண் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வாகனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்துதல், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நவீன கழிவறைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிர்பயா நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் நிலையில், பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டும் பணிகள் மேற்கொள்ளவும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.