புதுடெல்லி: ஹிஜாப் வழக்கை வரும் செப். 5ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், நேரடியாக வாதம் செய்வதற்காக கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில், கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதே விவகாரம் தொடர்பாக 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், ‘ஹிஜாப் விவகாரம் பல சட்ட கேள்விகளை எழுப்புவதால், இந்த விவகாரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக வாதத்தை முன்வைக்கிறோம்’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘நீதிமன்றத்தில் நேரடியாக வாதம் செய்ய ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளதால், எதிர்மனுதாரரான கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ எனக்கூறி வழக்கை வரும் செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.