ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தொடங்கப் போகும் தனி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் 51 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் சீனியர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை; ராகுல் காந்தியின் பிஏ கூட கட்சியின் முடிவுகளை எடுக்கிற நிலைமைதான் உள்ளது என்பது அக்கட்சியைவிட்டு விலகிய மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் குற்றச்சாட்டு.
காங்கிரஸ் மேலிடத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு ராஜினாமா செய்துவிட்டார் குலாம் நபி ஆசாத். அவரைத் தொடர்ந்து தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் மூத்த காங். தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
குலாம் நபி ஆசாத்தின் சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் அவருக்கு மிகப் பெரும் ஆதரவு அலை வீசுகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு காங்கிரசில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மையமாக வைத்து தேசிய கட்சி ஒன்றை குலாம் நபி ஆசாத் தொடங்க முடிவு செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் குலாம் நபி ஆசாத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது என அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் மேலும் 51 காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைவரும் குலாம் நபி ஆசாத் தொடங்க இருக்கும் கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும் அபாயம் உள்ளது.