ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி: ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கருக்கு இடம் பெயர்வு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இடம் பெயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, 18 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், அதிகாரத்தை பயன்படுத்தி, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது பெயரில் நிலக்கரி சுரங்க உரிமை பெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்எல்ஏ பதவியில் இருந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பைஸூக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் ரமேஷ் பைஸ் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவு கடிதத்தை, அவர் விரைவில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், சொந்த கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்களை, குந்தி என்ற இடத்தில் சொகுசு விடுதியில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தங்க வைத்தார். பாஜகவின் குதிரை பேரம் முயற்சியை தடுக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், குந்தி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இன்று, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டனர். இதற்காக அவர்கள், ராஞ்சி விமான நிலையத்திற்கு சொகுசு பேருந்துகள் மூலம் வந்தடைந்தனர். அங்கு தயாராக இருந்த விமானத்தில் அவர்கள் ராய்ப்பூருக்கு சென்றனர். இவர்களுடன், முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் வந்தார்.

ராய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சியை கவிழ்க்க பாஜக குதிரைப் பேரம் நடத்தி வருவதாக, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.