ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டிக்கு, அவரது கணவர் மாதவன் நம்மை தொடர்புகொண்டு விளக்கம் அளித்துள்ளார்.
ஜெ. தீபா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தன் கணவர் மாதவன் தன்னை பிரிந்து விடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி ஆனந்த விகடனுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், தீபாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமறிய அவரின் கணவர் மாதவனை பலமுறை தொடர்புகொண்டபோதும் . அவர் போனை எடுக்கவில்லை.
இந்த நிலையில்,”என் கணவர் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர் செய்கிறார்; உதவறதுக்கு யாருமில்ல” – வேதனை பகிரும் ஜெ.தீபா என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் டிஜிட்டலில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனைத்தொடர்ந்து நம்மை தொடர்புகொண்டு பேசிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன், ”எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான்தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன்.
அவர், தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறுதான். அவர், ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டே்டஸ் போட்டுள்ளார்.
அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும்” என்று விளக்கமளித்தார்.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. இருவரும் கூடிவாழ்வதே அவர்களது நலம் விரும்பிகளின் விருப்பம். நமது விருப்பமும் அதுவே!