புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவும் தனது தலைமையிலான அரசை கவிழ்க்கவும் பாஜக முயன்று வருவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் நேற்று டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இத்தீர்மானம் மீது இன்று காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 எம்எல்ஏக்களில் 62 பேரை கொண்டுள்ள ஒரு கட்சி தனக்குத் தானே அவையின் நம்பிக்கையை கோருகிறது.இதில் வெற்றி பெறுவதன் மூலம் ஊடக வெளிச்சம் பெற முயற்சிக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் கேஜ்ரிவால் நாடகமாடுகிறார். டெல்லி மக்களைப் பற்றி ஆம் ஆத்மி என்ன நினைக்கிறது? மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.