டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னை எப்படியாவது சில மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐக்கு அழுத்தம் அளித்து வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட மாநில கலால் வரி கொள்கை மூலம் சிசோடியா ஆதாயம் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிபிஐ, தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர். அருகே காசியாபாத்தில் உள்ள வங்கியில், மணீஷ் சிசோடியாவின் மனைவி பெயரில் உள்ள பெட்டகத்தை சிபிஐ திறந்து சோதித்தது.
இந்த சோதனையின்போது மனைவியுடன் மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராகியிருந்தார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், எப்படியாவது தன்னை சில மாதங்களாவது சிறையில் அடைத்து பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக கூறினார். ஆகஸ்ட் 19ம் தேதி மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ சுமார் 14 மணி நேரம் சோதனை நடத்தியது. அப்போது சிசோடியாவின் மனைவி பெயரில் இருந்த வங்கி பெட்டகம் ஒன்றின் சாவியை சிபிஐ அதிகாரிகள் பெற்றுச்சென்றனர்.
இந்நிலையில் காசியாப்பாத்தில் உள்ள வங்கியின் பெட்டகத்தை இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள். டெல்லியின் முந்தைய துணைநிலை ஆளுநர் அணில் பைஜாலின் அனுமதி இல்லாமலேயே புதிய கலால் வரி கொள்கை அமல்படுத்தப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. கையூட்டு பெற்றுக்கொண்டு தகுதியற்ற விற்பனையார்களுக்கு டெல்லி அரசால் உரிமம் வழங்கப்பட்டதாகவும் புகாரில் சிபிஐ தெரிவித்திருக்கிறது. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கெஜ்ரிவால் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கலால் வரி கொள்கை ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக 8 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மணீஷ் சிசோடியா செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில்,
சோதனையின்போது சிபிஐ அதிகாரிகள் நன்றாக நடந்து கொண்டனர். நாங்களும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். வங்கி லாக்கரில் ஒன்றும் இல்லை என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். பாவம் அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம். எப்படியாவது, எதை செய்வது என்னை ஒன்றிரண்டு மாதங்கள் சிறையில் வைத்தே ஆக வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு அழுத்தம் அளித்து வருகிறார். செய்வதை செய்யட்டும், அது அவரது அரசியல் பாணி. என் வீட்டிலும், பெட்டகத்தில் செய்யப்பட்ட சோதனையில் முறைகேடாக ஒன்றும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதில் மகிழ்ச்சியே என கூறினார்.