*₹1.30 கோடி அரசிற்கு திருப்பி செல்வதால் வேதனை
*மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை
சிவகாசி : திருத்தங்கல் 17வது வார்டு ஊருணியில் பூங்கா அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசு ஒதுக்கிய ரூ.1.30 கோடியை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. பூங்கா அமைப்பது குறித்து அந்த வார்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் 2வது வார்டில் செல்லியாரம்மன் ஊருணியில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டிலும், 17வது வார்டில் பழைய சாட்சியாபுரம் ரோடு பகுதி ஊருணியில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில் செல்லியாரம்மன் ஊருணியில் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
17வது வார்டில் பூங்கா அமைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இத்திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஒதுக்கிய ரூ.1 கோடியே 30 லட்சம் அரசிற்கே திருப்பி அனுப்ப வேண்டிய நிலை மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கஷ்டப்பட்டு வாங்கிய நிதியை திருப்பி அனுப்புகின்றனர் என்பதை கேள்விப்பட்டு சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஊருணியை சுற்றி வசிக்கின்ற மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் அந்த வார்டில் அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், அதில் பெரும்பான்மையான மக்கள் கூறுகின்ற கருத்துகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பூங்கா அமைகக் நிதி ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக நகர் முழுவதிலும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் மனிதநேயன் கூறுகையில், ‘இந்த ஊருணியின் பெயரே பறையன்குளம்தான். இந்த ஊருணி எங்களது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இது எங்களது சமூக பயன்பாட்டிற்கு மட்டுமே வைத்துள்ளோம். முன்பு இங்குதான் ஈமச்சடங்கு நடைபெற்றது.
இந்த இடத்தில் எங்கள் சமூகமக்கள் பயன்பெறும் வகையில் அரசு படிப்பகம், பள்ளிக்கூடம், திருமண மண்டபம் கட்ட அனுமதிப்போம். சிறுவர் பூங்கா அமைத்தால் இந்த பகுதியில் பெரும் சமூகவிரோத செயல்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பூங்கா அமைத்த பிறகு தொடர் பராமரிப்பில் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்காது. இதனால் இந்த பகுதியில் மீண்டும் சுகாதார சீர்கேடு ஏற்படும். சிவகாசியில் ஏராளமான ஊருணி, தெப்பங்களில் கட்டிடங்கள் கட்ட அனுமதித்தது போன்று இந்த ஊருணியிலும் எங்கள் சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும்’ என்றார்.
வழக்கறிஞர் ஈஸ்வரன் கூறுகையில், ‘இந்த 17வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் இந்த ஊருணி உள்ளது. இந்த ஊரணி தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் ஊருணியை சுற்றி குப்பைகள், மாமிச கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் சுற்றுப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கொசுக்கடியாலும், சுகாதார சீர்கேட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊருணியில் மெல்ல வளர துவங்கிய ஆகாயத்தாமரை, தற்போது குளம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே தெரியாத அளவு ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊருணியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் நான் மனு கொடுத்துள்ளேன். மாநகராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திலும் சிறுவர் பூங்கா வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளேன். பூங்கா அமைப்பது குறித்து 17வது வார்டில் அதிகாரிகள் நேரடியாக வந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அரசின் நிதியை திருப்பி அனுப்பக்கூடாது’ என்றார்.
விரைவில் கருத்து கேட்பு கூட்டம்
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அரசின் கெஜட்டில் பறையன்குளம் என்று உள்ளது. இது நீர்நிலை புறம்போக்கு என்பதால் ஐகோர்ட் ஆர்டர்படி இந்த ஊருணியில் வேற எந்த கட்டிடமும் கட்ட முடியாது. இந்த ஊருணியை தூர்வாரி பூங்கா அமைக்கும்பட்சத்தில் இந்த பகுதியே அழகு பெறும். ஊருணி தூர்வாரினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும்’ என்றார்.