புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணம் செய்யாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது (லிவிங் டுகெதர்) மற்றும் தன் பாலின ஈர்ப்பினால் இனி குடும்ப உறவுகள் வினோதமான வகையில் மாற்றங்களைக் காணலாம். இதுபோன்று மாற்றமடையும் வித்தியாசமான குடும்ப உறவு அமைப்புகளும் சட்டத்தின்படி முழு பாதுகாப்பையும் பெற அவற்றுக்கு உரிமை உள்ளது.
தாய், தந்தை அமைப்பு
தற்போதைய சமூகத்தின் பார்வையில் தாய், தந்தை குழந்தைகளுடன் வசிப்பது என்பதுதான் குடும்ப அமைப்பாக பார்க்கப்படுகிறது. இந்த அனுமானம் இரண்டு சூழலை புறக்கணிப்பதாக உள்ளது. ஒன்று பல சூழ்நிலைகள் ஒரு குடும்ப அமைப்பில் மாற்றத்தை உருவாக்க காரணமாக அமையலாம். மற்றொன்று பல குடும்பங்கள் இந்த கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஆகும். வாழ்க்கைத் துணையின் மரணம், பிரிவு அல்லது விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒரு குடும்பம் ஒற்றைப் பெற்றோர் குடும்பமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதேபோன்று, குழந்தைகளின் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மறுமணம், தத்தெடுப்பு செய்வதன் மூலமாகவும் அந்த வடிவம் மாற்றத்துக்கு உண்டாகலாம்.
காதல் மற்றும் குடும்ப சூழல் அடிப்படையில் மாற்றமடைய நேரிடும் குடும்பங்களும் பாரம்பரிய குடும்ப உறவு அமைப்பைப் போலவே உண்மையானவை. எனவே, அதுபோன்ற மாற்றமடைய நேரும் வித்தியாசமான குடும்ப வடிவங்களும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல சமூக நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களையும் சமமாகப் பெறத் தகுதியானவை. இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையும் வேறாக உள்ளது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் தன் பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு, மாற்று பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, லிவிங் டுகெதர் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதைஅனுமதிப்பது உள்ளிட்ட உரிமைகளுக்காக ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வரும் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.