சிங்கப்பூர்: திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது, “வரும் ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise – ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா வழங்கப்படும். இத்துடன் அவர்களை சார்ந்த வர்கள் வேலை தேடவும் அனுமதிக்கப்படும்.
விளையாட்டு, கலை அறிவியல் மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்குவோருக்கு இந்த சம்பள அளவுகோல் பொருந்தாது. அவர்களும் ஜனவரி 1 முதல் ‘ஒன்’ விசாக்களை பெற முடியும்” என்று தெரிவித்தன.
மனித ஆற்றல் துறை அமைச்சர் டான் சீ லெங் கூறும்போது, “முதலீட்டாளர்களும் திறமை யாளர்களும் முதலீடு செய்யவும் வேலை பார்க்கவும் பாதுகாப்பான மற்றும் ஸ்திரமான இடங்களை தேடுகின்றனர். சிங்கப்பூர் அத்தகைய இடமாகும். எனவே திறமைகளுக்கான உலகளாவிய மையமாக சிங்கப்பூரின் நிலையை உறுதிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்” என்றார்.
கரோனா பாதிப்புக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஒயிட்-காலர் பணியாளர்கள் சிங்கப்பூர் வருவது குறைந்தது. இந்நிலையில் திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவும் சர்வதேச வர்த்தகத்தை ஈர்க்கவும் இந்த ஆண்டு சிங்கப்பூர் அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.