வாஷிங்டன்: தைவானுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஒப்புதலை பைடன் அரசு கோரவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைடன் அரசு தைவானுக்கு போர் விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தைவான் – சீனா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் அமெரிக்க எம்.பி. நான்சி பெலோசி தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை மீறி வருகை தந்தார். அவரது வருகைக்குப் பின்னர் சீனா தைவான் எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.