பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று `மன் கி பாத்’ என்ற தலைப்பில் மக்களிடையே வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய மாதாந்திர உரையில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி கூறியதாவது, “வரும் 2023 -ம் ஆண்டானது சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ளது. சிறு தானியங்கள் குறித்த ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதே இதன் நோக்கம்.
இன்று உலகம் முழுவதிலும் சிறுதானியங்கள் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விருந்தினர்களுக்குச் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுகளை இந்தியர்கள் வழங்குகின்றனர். அவர்களும் அதை ரசித்து உண்கின்றனர். சிறுதானியங்களை அவர்கள் விரும்புவதோடு, அதைக் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் கொள்கின்றனர்.
பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் விவசாயம், கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் ஒரு பகுதியாகச் சிறுதானியங்கள் இருக்கிறது. வேதங்களிலும், புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் சிறுதானியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான சிறுதானியங்கள் இந்தியாவின் பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
அதோடு சிறுதானியங்கள் விவசாயிகளுக்கு அதிக நன்மை அளிக்கிறது. முக்கியமாக சிறு விவசாயிகளுக்கு, ஏனெனில் சிறுதானியங்கள் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விடுகின்றன. அதிகமான தண்ணீரும் இதற்குத் தேவைப்படாது.
ஆரோக்கியமாக வாழவும், சாப்பிடவும் இக்காலத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிறுதானியங்களில் அதிகமான புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் உள்ளது. இதனை மக்கள் சிறந்த உணவு என்று கூட அழைக்கிறார்கள்.
அதோடு இதன் நன்மைகள் ஒன்றல்ல பல உண்டு. உடல் பருமனைக் குறைப்பதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. வயிறு மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.