களக்காடு: விநாயகர் சதுர்த்தி விழா வை முன்னிட்டு களக்காட்டில் நாளை (ஆக.31) 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு களக்காடு தோப்புத்தெரு, தேரடி, மூங்கிலடி, சிதம்பரபுரம், டோனாவூர், பண்டிதன்குறிச்சி, காமராஜ்புரம், நெடுவிளை, பத்மநேரி, இடையன்குளம், கீழ உப்பூரணி, கீழதேவநல்லூர், கள்ளிகுளம், மாவடி, மாவடி புதூர், குளத்துக்குடியிருப்பு, கட்டளை, திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதையொட்டி இன்று (புதன்) 25 விநாயகர் சிலைகளும் களக்காட்டிற்கு கொண்டு வரப்பட்டன. 2 அடி உயரம் முதல் 8 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைகள் நாளை (புதன்) 31ம்தேதி அந்தந்த இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கந்தசாமி, செயலாளர் ஆதி மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகருக்கு தினசரி சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.
இந்த வழிபாடுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கோயில், திருமடங்கள் மாநில இணை செயலாளர் சுப்பையா, கோட்ட பொறுப்பாளர் கண்ணன், ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். 5 நாட்கள் சிறப்பு வழிபாட்டுக்கு பின் வருகிற 4ம்தேதி (ஞாயிறு) விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது. அன்று மதியம் 25 விநாயகர் சிலைகளும் களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது. பின்னர் உவரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதையொட்டி களக்காடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.