நெல்லை, நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்ட தாம்பரம் சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட தாம்பரம் சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் ஞாயிற்று கிழமையோடு நிறுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான காலநீட்டிப்பை எதிர்பார்த்து பயணிகள் காத்திருக்கின்றனர். ேகாடை காலங்களில் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். இவ்வாண்டு தெற்கு ரயில்வே கோடை காலத்தை ஒட்டி நாகர்கோவில் – தாம்பரம் ஞாயிற்றுக்கிழமை சேவை, நெல்லை – தாம்பரம் ஞாயிறு சேவை, நெல்லை – மேட்டுப்பாளையம் வியாழன் சேவை, எர்ணாகுளம் – வேளாங்கண்ணி, சென்னை – எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கியது.

இந்த சிறப்பு ரயில்களில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வழி செங்கோட்டை ரயில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் நெல்லை, குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்ட தாம்பரம் ரயில் சேவைகளின் நீட்டிப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் ஞாயிற்று கிழமையோடு சேவையை நிறுத்தி கொள்கிறது. நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. எனவே நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில்களை முன்பு போல இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

ஓணம் பண்டிகையையொட்டி நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு, கோயம்புத்தூர், சேலம், காட்பாடி, சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திதாம் ரயிலின் பெட்டிகளை கொண்டு ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நெல்லை, மதுரை வழியாக வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டும், அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் கேரளா பயணிகள் பயன்படும் படியாக இங்கிருந்து சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த ரயிலையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று நெல்லை, குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.