சினிமாதுறையில் பிரபல நடிகையாக வலம்வருபவர் அமலா பால். இவர் திரைப்படத்துறையில், பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். பின்னர், 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள பெரிய முதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்துத் தங்கி, தொழில் செய்துவந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை அமலா பாலும், அவர் ஆண் நண்பரும் பிரிந்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவேன்’ என பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவர் உறவினர்கள் நடிகை அமலா பாலை ஏமாற்றி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதே காரணத்தைவைத்து… தன்னிடமிருந்து பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து, மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், தொழில்ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்துவருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை அமலா பால் தரப்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், நேற்றைய (29.08.2022) தினம் 12 பேர்மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று காலை நடிகை அமலா பாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங்கின் தத்தையைக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். அதில், நடிகைக்கு உரிமை இல்லை… தானே ‘டைரக்டர்’ என்பதுபோல அந்த நபர் ஆவணங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், `புகைப்படங்களை வெளியிடுவேன்’ என மிரட்டி ஏமாற்றியதாகவும், அதன் மூலம் பணம், கார் மற்றும் பொருள்களை ஏமாற்றியதாகவும் நடிகையின் வழக்கறிஞர் மூலம் 12 பேர்மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 384, 420 உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்று காலை, நடிகையின் ஆண் நண்பர் கைதுசெய்யப்பட்டார். ஏமாற்றிய பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு எவ்வளவு என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்” என்கிறார்கள்.