புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு பெயர்கள் பரிந்துரை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் விருது வழங்கப்படும்.
அந்த வகையில் 2023-ம் ஆண்டின் பத்ம விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதியானவர்கள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் சுமார் 11 சிவில் தேசிய விருதுகளுக்கும் ஒரே இணைய தளத்தில் பரிந்துரைகளை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரையை வழங்க வரும் செப்டம்பர் 15-ம் கடைசி நாள் ஆகும்.
தற்போதைய அரசு பத்ம விருதுகளை மக்கள் விருதாக மாற்றும் வகையில் பொதுமக்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்று தகுதியானவர்களை ஆய்வு செய்து தேர்வு செய்கிறது.
இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கான பரிந்துரைகளை யும், மற்றவர்களுக்கான பரிந்துரைகளையும் அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பரிந்துரைகள் குறித்த விதிமுறைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.