இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். பலர் காணாலம் போயினர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்களை படகு ஒன்றின் மூலம் சிந்து நதியில் அழைத்து வரும்போது, அந்தப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர். இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையில் நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பெரும் பேரிடர் பாதிப்புக்கு பாகிஸ்தான் உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்துக்கு இதுவரை 1,100 பேர் பலியாகினர். 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 15% மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளம் காரணமாக வரும் வாரங்களில் பாகிஸ்தான் கடுமையான உணவு நெருக்கடிக்கு உள்ளாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் திட்டக் குழு அமைச்சர் இக்பால் பேசும்போது, ”வளர்ந்த நாடுகளின் பொறுப்பற்ற வளர்ச்சியால் ஏற்பட்ட காலநிலை மாற்ற பாதிப்புக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது. வளர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியாக பாகிஸ்தானுக்கு உதவ முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிவாரணத்துக்காக சுமார் 160 மில்லியன் டாலர்களை ஐக்கிய நாடுகள் சபை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.