பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்கு பிரமாண்டம் முக்கியம்: விக்ரம்
விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் விக்ரம் பேசியதாவது: எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் பிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார். மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது. மிருணாளினி ரவிக்கு என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட் என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. இவ்வாறு விக்ரம் பேசினார்.