ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நடத்த ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி மீது உள்ள குறைபாடுகளை பாஜக எடுத்துக்கூறி, கடந்த 2 முறை நடந்த இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது 3-வது முறையாக நடைபெற உள்ள முனுகோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், பாஜக – டிஆர் எஸ் கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. மேலும், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் அடிக்கடி ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது கட்சியை பலப்படுத்தி வருகின்றனர்.
இதனால், பாஜகவை தங்களது முதல் எதிரியாக முடிவு செய்த தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், தெலங்கானாவில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் பாஜகவை வெளியேற்ற வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். ஆனால், பாஜக தனது பாணியில், தெலங்கானாவில் ‘ஆகர்ஷ் தெலங்கானா’ எனும் பெயரில் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்டவர்களை தங்கள் கட்சியில் இணைய வைத்து வருகின்றனர். நடிகர்கள் நிதின், ஜூனியர் என்.டி.ஆர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஹைதராபாத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர், தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில், பாஜகவுக்கு இவர்கள் பணியாற்ற உள்ளனர். கடந்த 2 முறையும் இவர்கள் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி, இதுவரை சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காக காரணத்தால், ஐடி, பொறியியல் மாணவர்கள் இம்முறை பாஜகவின் பக்கம்
சாய்ந்துள்ளனர். இது தெலங்கானா ஐடி துறை அமைச்சரும், தெலங்கானா முதல்வரின் மகனுமான கே.டி. ராமாராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.