பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார். பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.
எல்லோரும் தோல்வியை ருசிக்க வேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவராக இருந்தபோதிலும், தோல்வியை எதிர்கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984ல், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், 1989ல் நடந்த தேர்தலில், தோல்வியை சந்தித்தார். பா.ஜ.கவில் சுமார் 300 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனாலும், பிஹார் இப்போது அவர்களுக்கு இல்லை. பிஹார் பாதையை மேலும் பல மாநிலங்கள் பின்பற்றுவார்கள். தேர்தலுக்கு முன், பாஜகவில் எந்த தலைவர்களும் இருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் தனது கட்சியை விரிவுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட மம்தா, நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தலைமையில் எதிர்க்கட்சிகளை திரட்டி பொது வேட்பாளரை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கூட ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் என மம்தா அறிவித்துள்ளார்.
மம்தாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது…