ஐதராபாத்: கடந்த 2002ல் தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், நிதின். தொடர்ந்து ‘தில்’, ‘ஆஞ்சநேயம்’, ‘சை’, ‘இஷ்க்’, ‘ஹார்ட் அட்டாக்’, ‘பீஷ்மா’, ‘ரங் தே’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ‘மச்சர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐதராபாத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த நிதின், அவருடன் 20 நிமிடங்கள் பேசினார். பிறகு ஜே.பி.நட்டாவுக்கு திருப்பதி வெங்கடாசலபதி சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது டிவிட்டரில், ‘தெலுங்கு நடிகர் நிதினை தெலங்கானாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெவ்வேறு அரசியல் பரபரப்புகளில் ஒரு இனிமையான தொடர்பு கொண்டிருந்தோம். சமூக மற்றும் கலாச்சார பிரச்னைகள் பற்றி பேசினோம். வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து அவர் பேசினார். அதற்காக அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.