சென்னை : இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதையடுத்து குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது என்று மகன் மனோஜ் தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த வைரமுத்து. பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள். அச்சப்படுவதற்கு ஆதாரம் இல்லை என கூறியிருந்தார்.
விரைவில் சந்திக்கிறேன்
இதையடுத்து, பாரதிராஜா சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம்’ என்றும் பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
உடல்நிலையில் முன்னேற்றம்
இந்நிலையில், மருத்துவமனை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. தீவிர பிரிவில் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் அவரது ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேரில் சந்தித்த ராதிகா
நடிகை ராதிகா சரத்குமாரும், எம்ஜிஎம் மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, வைப்ரேஷங்களும் உள்ளன. இன்று எனது இயக்குனரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என பதிவிட்டு இருந்தார்.