பார் கான்ட்ராக்டர் கொலையில் கூலிப்படை தலைவனின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு: 25 ஆண்டுகளுக்கு எந்த சலுகையும் கிடையாது

மதுரை: பார் கான்ட்ராக்டர் கொலையில் கூலிப்படை தலைவன் கட்டை ராஜாவின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த ஐகோர்ட் கிளை, 25 ஆண்டுகளுக்கு எந்தவித சலுகையும் கோர முடியாது என கூறியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (23). பார் கான்ட்ராக்டரான இவர், கடந்த 2013ல் மாடாகுடி அருகே கொலை செய்யப்பட்டார். இவரை, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ராஜா (எ) கட்டை ராஜா (41), கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக பட்டீஸ்வரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது மனோகரன், மாரியப்பன் இறந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த ஏப்ரலில் ராஜா (எ) கட்டை ராஜாவை சாகும் வரை தூக்கிலிடவும், ஆறுமுகம், செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 3 பேர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘அரிதிலும், அரிதான கொலை வழக்குகளில் தான் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த கொலையை பொறுத்தவரை அந்த வரம்புக்குள் வராது. தற்போது பணம், நகை, பெண் மற்றும் நிலத்திற்காக அடிக்கடி கொலைகள் நடக்கின்றன. எனவே, கட்டைராஜா மீதான குற்றத்திற்கு தூக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதால், அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. இவர், நன்னடத்தை காரணமாக முன்கூட்டிய விடுதலை உள்ளிட்ட சலுகைகளை 25 ஆண்டுகளுக்கு கோர முடியாது. மற்ற இருவரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.