கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட “casualty staff” மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மதுக்கரை அடுத்த எல்.அன்டி பைபாஸ் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நர்சிங் உட்பட மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பணிபுரியும் “casualty staff” ரூபன் கார்த்திக் என்பவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இது தொடர்பாக மாணவிகள் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த நர்சிங் கல்லூரியை முற்றுகையிட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கல்லூரி மாணவ,மாணவிகள் கைகளில் பதாகைகள ஏந்தி ரூபன் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனிடையே ரூபன் கார்த்திக்கை பணியிடைநீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரூபன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மாணவிகள் இது தொடர்பாக மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அனுப்பியுள்ளதாக தெரவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM