சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிவமூர்த்தி முருக சரணரு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை, செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, கர்நாடக சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம்.
பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்தக் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலிருந்து முருக சரணரு மீது வழக்கு கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சித்ரதுர்கா காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மடத்தின் குற்றம் இழைக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் முருக சரணரு, திங்கள்கிழமையன்று யாரும் அறியா இடத்திற்குச் செல்ல முயன்று, பின்னர் பங்காபுரா சோதனைச் சாவடி அருகே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்துக்குத் திரும்பிச் செல்லும்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக முருக சரணரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சூழ்நிலையிலிருந்து தப்ப முடியாது’’ என்றும் கூறியுள்ளார்.
சிறுமிகள் அளித்த வாக்குமூலம் குறித்துப் பேசியுள்ள போலீஸார், “சிறுமிகளில் யாராவது ஒருவர் அவரின் அறைக்கு அனுப்பப்படுவார். அங்கு அவர்களுக்கு போதைப் பொருள் கலந்த உணவு அல்லது பானம் வழங்கப்படும். பின்னர் மயக்கநிலையில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதோடு மடத்தில் உள்ள பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர் எனச் சிறுமிகள் கூறுகின்றனர். முருக சரணருவின் அரசியல் மற்றும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமிகள் உதவிக்காக மைசூரில் உள்ள Odanadi Seva Samsthe தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகி உள்ளனர்” என தெரிவித்தனர்.