புதுடில்லி : பிரபல பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷன் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென், 72, மாரடைப்பு காரணமாக டில்லியில் நேற்று காலமானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அபிஜித் சென். வெளிநாடுகளில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகளில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் பணியாற்றியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, டில்லியில் உள்ள தன் வீட்டில் இருந்த அபிஜித்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் அபிஜித் சென் திட்ட கமிஷன் உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2014ல் தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றதும் தானியங்கள் தொடர்பான நீண்ட கால கொள்கையை வடிவமைக்கும் குழுவுக்கு தலைவராக இருந்தார்.
அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களுக்கு உலகளாவிய வினியோக கொள்கை தேவை என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பத்ம பூஷண் விருது பெற்றவரான அபிஜித் சென் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement