புதுச்சேரி: “பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும்” என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா பதில் அளித்து பேசியது: “சிறப்பு கூறு நிதி கடந்தாண்டு மொத்தம் 23 துறைகளுக்கு ரூ.414 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.333.50 கோடி செலவு செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.172.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.142.86 கோடி செலவு செய்யப்பட்டது. சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க மாநில அளவிலான மேம்பாட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். காலாப்பட்டு தொகுதியில் வசிக்கும் 29 பழங்குடியினர் குடும்பத்துக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகட்டும் மானியம் உடனடியாக வழங்கப்படும்.
மாணவர்களுக்கு கல்விக் கடன் விரைவில் வழங்கப்படும். மேலும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுவதற்கு போக்குவரத்து துறை மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு நூறு சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்படும். சென்னை, திருப்பதி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தனியார் பங்களிப்புடன் சொகுசுப் பேருந்துகள் விடப்படும்.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிடையே கலந்தாலோசித்து மாநிலங்களிடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்த உத்தேசிக்கப்படும். பிஆர்டிசியில் உள்ள பழைய மற்றும் சீர் செய்ய முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை தணிக்கை செய்து விற்று அந்த நிதியை புதுவாகனங்கள் வாங்க பயன்படுத்தப்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைக்குரிய விஷயமான பயணிகள் பேருந்து இயக்குவதற்கான வழித்தட மாற்றம் மற்றும் நேர மறுநிர்ணயம் ஆகியவற்றை உடனடியாக மேற்கொண்டு பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
மகளிர் ஆட்டோ ஓட்டுவதை ஊக்குவிக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திடவும், பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி இலவசமாக அளித்து பர்மிட் வழங்கப்படும். மத்திய அரசு நிதியுதவி மூலம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரியில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் காரைக்காலில் மண்டல ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும். இம்மையங்களின் மூலம் ஓட்டுநர் பயிற்சி, தானியங்கி ஓட்டுநர் சோதனை ஆகியன மேற்கொள்ளப்படும்.
டீசல், பெட்ரோல் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கு உரிய ரிட்ரோ கிட் பொருத்துதல் மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் நடமாடும் மையங்கள் மூலம் வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இரண்டு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இணையதளம் வியே வாடகை்கு அமர்த்திக் கொள்வதற்கான ஆன்லைன் போர்டல் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை எவ்வித அச்சமும் இன்றி தெரிவிக்க மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்படும். அனைத்து நூலகங்களிலும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். நூலகர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூடுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கலைமாமணி, தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா விருதுகள் விரைவில் வழங்கப்படும். சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு வாசிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நபர் நீதிபதி கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.