சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீஸார்வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களான தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓபிஎஸ் தரப்பில் 27 பேர் என மொத்தம் 64 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பை சேர்ந்த 64 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவும், தலா 20 ஆயிரம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளார்.