பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லி தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தரவுகள் பின்வருமாறு:
2021-ம் ஆண்டில் நாட்டிலுள்ள மொத்தம் 19 பெருநகரங்களில் நாளொன்றுக்கு மூன்று பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் நாட்டின் தலைநகர் டெல்லியில் தான் அதிகமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாள் ஒன்றுக்கு இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 5,543 குற்றங்களும், பெங்களூருவில் 3,127 குற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. டெல்லியில், 2021-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 13,869 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020-ம் ஆண்டு இது 9782 ஆக இருந்தது. தற்போது அதிகரித்துள்ளது. இது ஒரே ஆண்டில் 40% வரை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்துப் பெருநகரங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.2% ஆகும்.
20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மற்ற பெருநகரங்களுடன் தலைநகர் டெல்லியை ஒப்பிடுகையில், கடத்தல், குடும்ப வன்முறை, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை டெல்லியில் அதிகளவில் உள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் தரவுகளின்படி 2021-ம் ஆண்டில் மட்டும், பெருநகரங்களில் அதிகபட்சமாக பெண் குழந்தைகளுக்கு எதிராக 833 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
சிறார் குற்றங்கள் செய்யும் தரவுகளின் அடிப்படையிலும் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையும் அகமதாபாத்தும் உள்ளன.