புதுடில்லி : பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை சம்பவங்கள் நடக்கும் பெருநகரங்களில், தலைநகர் புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டில் அங்கு, பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 13 ஆயிரத்து 892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகம், 2021ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாட்டில் உள்ள, 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2021ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 19 பெருநகரங்களில் 43 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், புதுடில்லியில் மட்டும், 13 ஆயிரத்து 892 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020ல் புதுடில்லியில், 9,782 வழக்குகள் பதிவாகின.அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவின் மும்பையில், 5,543 வழக்குகளும், கர்நாடக தலைநகர் பெங்களூரில், 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளன.புதுடில்லியில் ஒவ்வொரு நாளும், இரண்டு சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். கடந்தாண்டில் அங்கு, 833 சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் தொடர்பாக, 3,948 வழக்குகள், கணவரால் துன்புறுத்தல் தொடர்பாக, 4,674 வழக்குகள் என, இவற்றிலும் புதுடில்லியிலேயே அதிக சம்பவம் நடந்துள்ளன.பெருநகரங்களில் நடந்துள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மிகவும் குறைந்த அளவாக, 11 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.அடுத்ததாக கோவையில் 12 பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement