பெண் குழந்தைகளை காப்பாற்ற உடனடி நடவடிக்கை: ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தல்!

தேசிய குற்ற ஆவண மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி, பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து கொண்டிருப்பதாகத் 29.08.2022 அன்று வெளியாகி இருக்கும் தேசிய குற்ற ஆவண மையத்தின் (என்சிஆர்பி – 2021) அறிக்கை தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய அளவில் காணாமல் போன பெண் குழந்தைகளில் சுமார் 10 % பெண் குழந்தைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 54,962 பெண் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனவர்கள் மட்டும் 4,914 பேர். 2020 ஆம் ஆண்டுவரை காணாமல் போனவர்களில் 234 ஆண் குழந்தைகளையும் 1035 பெண் குழந்தைகளையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய அளவில் மத்திய பிரதேசத்தில் 9,407 பெண் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள் அதற்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 8,478 பெண் குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் காணாமல் போவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 3 ஆவது இடம் வகிக்கிறது. இங்கு 4914 பெண் குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் மட்டும் 1484 ஆண் குழந்தைகள் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்திய அளவிலான ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சுமார் 9% ஆகும்.

பச்பன் பச்சாவோ அந்தோலன் vs யூனியன் ஆஃப் இந்தியா (WP (Civil) 75 of 2013) என்ற வழக்கில் 2013 ஆம் ஆண்டு மே 10 அன்று, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒரு குழந்தை காணாமல் போனது தெரியவந்தால் உடனடியாக காவல்துறை எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ‘Standard Operating Procedure (SOP)’ ஆக அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியிருந்தால் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த 10 ஆண்டுகளில் நிச்சயம் குறைந்திருக்கும்.வ்கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக இந்த விஷயத்தில் எந்தவொரு அக்கறையையும் காட்டவில்லை என்பதே அந்தத் துயரம் தொடர்வதற்குக் காரணம். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்தபோது அங்கு தமிழ்நாட்டின் சார்பில் வழக்கறிஞரைக்கூட அன்றைய அதிமுக அரசு அனுப்பவில்லை. அதை உச்சநீதிமன்றம் கண்டித்தது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த மெத்தனப் போக்கைக் களைந்து நமது பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.