மகாத்மா காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். The Architect of the New BJP: How Narendra Modi Transformed the Party என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், “பிரதமரின் ஆட்சி மற்றும் நிறுவனத் திறன்களைப் போல சமகால அரசியலில் அவருக்கு இணை யாரும் இல்லை. சித்தாந்தத்தில் சமரசம் செய்யாமல், தனது புதிய அணுகுமுறையால் பா.ஜ.க-வை தேர்தல் வெற்றி இயந்திரமாக மாற்றியிருக்கிறார். பா.ஜ.க-வின் சித்தாந்தம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் கடந்த எட்டு ஆண்டுகளில் கட்சியின் வெல்லமுடியாத பயணத்துக்கு பங்களித்திருக்கலாம். ஆனால், இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் நம்பிக்கையை வென்றதில் மோடியின் உத்திக்கு இணையாக எதுவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வால் தனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டாலும், பிரதமர் மோடி அதை நிறைவேற்றி எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெற்றிகளை வழங்கினார். சுதந்திர இந்தியாவில் அவரைப் போன்ற தலைவர் வேறு யாரும் இல்லை.
பிரதமர் மோடியின் நீடித்த புகழ், இந்தியர்களை மட்டுமல்ல, உலகத் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. நீண்டகாலமாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கும் என பெரும்பாலும் எண்ணப்பட்டாலும், மக்கள் பிரதமரைக் கண்டு இன்னும் சோர்வடையவில்லை. அவரது ஆளுமை மற்றும் நிறுவன திறன்கள் அனைத்தும் தெய்வீக அருள் இல்லாமல் சாத்தியமில்லை என்று நான் நம்புகிறேன். சாதி, சமூகம் என்ற எல்லைகளை உடைத்திருக்கிறார் மோடி.
மகாத்மா காந்திக்குப் பிறகு, நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தலைவர் இருந்தால், அவர் பெயர் நரேந்திர மோடி என்று நான் நம்புகிறேன். அவ்வாறு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. விரைவான மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் மோடியின் தைரியம் மக்கள் மத்தியில் அவரது அந்தஸ்தை விரிவுபடுத்தியுள்ளது. ஏனெனில் அவர் எப்போதும் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் சவால்களையும் புரிந்துகொள்கிறார்.
தற்போது இந்தியக் குடியரசுத் தலைவரின் செய்திச் செயலாளராக உள்ள அனுபவமிக்க பத்திரிகையாளர் அஜய் சிங் எழுதியுள்ள `The Architect of the New BJP: How Narendra Modi Transformed the Party’ என்ற இந்த புத்தகம், மோடி மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுடன் அவரது இணையற்ற நிறுவனத் திறன் மற்றும் தலைமைத்துவத் திறமையை எடுத்துக்காட்டுகிறது என்ற கருத்து வெறும் கோஷம் அல்ல, அது உண்மை” எனத் தெரிவித்திருக்கிறார்.