ஜெர்மனியில் படிக்க மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் பேர் மோசடி செய்பவர்கள் என்று ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன், “ஜெர்மனியில் சுமார் 30,000 இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், சில முகவர்கள் பொய்களைப் புனைவதில் வல்லவர்கள். இந்தியர்களில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் பேர் மோசடி செய்வதில் வல்லவர்கள். பல முகவர்கள் பொய்களை புனைந்து மாணவர்களுக்கு விசா பெற்றுத்தந்ததாக தகவல் வெளியானது. இந்த செய்தி ஜெர்மன் அதிகாரிகள் அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் மீண்டும் ஒருமுறை முழுமையாகச் சரிபார்க்க வைத்திருக்கிறது.
எனவே, விண்ணப்பங்களை சரிபார்த்தபின்னர் ஜெர்மனை விட்டு அனுப்பவேண்டியவர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்களால், சில இந்திய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கவில்லை அல்லது கிடைக்காமலும் போகலாம். விசா விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பத்தைச் சரியாகச் சோதிக்காமல் விட்டது ஜெர்மன் தூதரகத்தின் தவறு. எனவே ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் தூதரக அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் அரசாங்கமும் பேசியிருக்கிறது.
மேலும், நாங்கள் எங்கள் துணைத் தூதரகங்களுடன் ஒன்றாக அமர்ந்து தீர்வு காணவுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சிக்கல் இயல்பு நிலைக்குத் திரும்பும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பை வளர்த்துக்கொள்ள புதிய அரசின் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆர்வமாக இருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.