முதன்முதலாக திறக்கப்பட்ட அம்மா உணவகத்தை இடிக்க சென்னை மாநகராட்சி முடிவு: மக்கள் எதிர்ப்பு

முதன்முதலாக திறக்கப்பட்ட மதுரவாயலில் உள்ள அம்மா உணவக கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ள நிலையில் மீண்டும் அம்மா உணவகம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி 146 வது வார்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் மாதா கோயில் தெரு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள அம்மா உணவக கட்டடத்தை இடிக்க இன்று நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்மா உணவகம் முதலில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னையில் முதன்முதலாக திறக்கப்பட்ட 15 அம்மா உணவகங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
image
கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டடம் கடந்த வருடம் பெய்த கன மழையில் சிதலமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரம் பாயும் அபாயமும் ஏற்படத் துவங்கியதால் அங்கு செயல்பட்ட அந்த அம்மா உணவகம் அருகே இயங்கி வந்த இ சேவை மையக் கட்டடத்தில் தற்காலிகமாக கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது.
image
மேலும் இந்த இ சேவை மையக் கட்டடம் சிறிய அளவில் இருப்பதால் இங்கு உணவு சமைத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. பரிமாறப்பட்டு வாடிக்கையாளர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வசதி செய்து தரப்படவில்லை. உணவு பார்சலாக அல்லது வாடிக்கையாளர்கள் கையில் எடுத்து வரும் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
image
தற்போது சென்னை மாநகராட்சி இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு அங்கு மாடர்ன் டாய்லெட் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதன் முறையாக துவக்கப்பட்ட இந்த அம்மா உணவகக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பழைய அம்மா உணவக கட்டடத்தை சரிசெய்து அதில் மீண்டும் உணவகம் செயல்பட வலியுறுத்தி உள்ளனர்.
image
இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள், “இந்த அம்மா உணகவமானது கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கூலித் தொழிலாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் இங்கு வந்து அம்மா உணவகத்தில் மிகக் குறைந்த விலையில் சாப்பாடு வாங்கி தங்கள் பசியை போக்கி வந்தனர். இந்த நிலையில் இந்த கட்டடத்தை இங்கே இருந்து அகற்றி வேறு திட்டத்தை கொண்டு வருவது சரியான செயல் அல்ல! எனவே இந்த அம்மா உணவகத்தை புதுப்பித்து பழையபடி மக்கள் பயன்பாட்டிற்கு இந்த அரசு கொண்டுவர வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.