தமிழ்நாட்டில் மாற்றம்..முன்னேற்றம்…அன்புமணி என்ற ஒற்றை கோஷத்துடன் கடந்த 2016ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை தனித்து சந்தித்த பாமக படுதோல்வி அடைந்தது.
முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தது பாமக வட்டாரத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த அடியை தாங்கிக்கொள்ள முடியாத பாமக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் ஆசையை குழிதோண்டி புதைத்துவிட்டு திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் 5 இடத்தில் மட்டுமே பாமகவால் வெற்றி பெற முடிந்தது. ஏற்கனவே தேசிய கட்சிகளுடனும், திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என, கூறி விட்டு அதிமுக கூட்டணியில் இணைந்தது தமிழகம் முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் 2021ம் ஆண்டு கிடைத்த செம அடியை நினைத்து பார்த்த பாமக மீண்டும் அதிமுக கூட்டணியில் முருங்கை மரம் ஏறி உள்ளது. அதன்படி வருகிற 2026ல் பாமக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்றும், அதற்கான நேரமும் வந்துவிட்டது என்றும் அன்புமணி ராமதாஸ் கட்சியினரிடம் கூறி வருகிறார்.
இந்த சூழலில் பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ‘இது பாமக 2.0. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பாமக தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ சட்டசபை தேர்தலை சந்திக்க போவது உறுதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளில் பாமக தலைகாட்டி வருகிறது.
அந்தவகையில் காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளது. இந்நிலையில் தான் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதை பாமக தட்டி கேட்டு தமிழக அரசியலையே தெறிக்கவிட்டு உள்ளது.
அதாவது பாமக சார்பில் திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கத்திரிப்பள்ளி பகுதியில் 540 ஏக்கர் பரப்பளவில் 92 கோடி மதிப்பீட்டில் ஒரு அணை மற்றும் மொக்கோலா கண்டிகை பகுதியில் 420 ஏக்கர் பரப்பளவில் 72 கோடி மதிப்பீட்டில் ஒரு அணை என 2 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டு அணைகளையும் ஆந்திரா அரசு கட்டிவிட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொசஸ்தலை ஆற்றின் வழியாக வந்து சேராது. ஆந்திரா அரசாங்கம் தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
கொசஸ்தலை ஆற்று படுகை என்பது 3,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த 3800 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 3000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு தமிழ்நாட்டில் தான் உள்ளது.
மீதமுள்ள 800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அதாவது 75% தமிழகத்தில் இருக்கிறது. மீதம் உள்ள 25% மட்டும்தான் ஆந்திரவில் உள்ளது. நமது கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட ஆந்திராவுக்கு உரிமை கிடையாது.
ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆந்திராவுக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டும்.
ஒரு காலத்தில் பால் போன்று பாலாறு ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இன்று பாலைவனமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார்? இதே ஆந்திர அரசு தான்.
பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் ஆந்திராவில் கட்டியதன் விளைவாக இன்று தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை. பாலைவனமாக மாறியுள்ளது. இந்நிலை கொசஸ்தலை ஆற்றுக்கும் வந்து விட கூடாது.
தற்போது, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருக்கும் பூண்டி ஏரிக்கே, கொசஸ்தலை ஆறு தான் தண்ணீர் தந்து கொண்டு இருக்கிறது.
ஆந்திரா அணை கட்டிவிட்டால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசே விழித்துக்கொள். ஆந்திரா அணை கட்டிவிட்டால், சென்னைக்கு குடிநீர் கிடைக்காது.
எனவே உடனடியாக இந்த அணைகளை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கும் முன்பாக ஆந்திரா அரசிடம் தமிழக அரசாங்கம் பேசி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இதன் மூலம் பாமக முன்னறிவிக்கும் ஆபத்து உண்மையில் நியாயமான ஒன்றாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்
என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே சமயம் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கைக்கு தமிழக அரசு செவிமடுக்குமா? அல்லது கோட்டைவிடுமா? என்பது போக போகத்தான் தெரியும் என்று தைலாபுரம் தோட்டம் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.