முருகப்பா குழுமத்தின் ‘மோன்ட்ரா’ 3 சக்கர மின் வாகனம்: ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: முருகப்பா குழுமத்தின் ‘டிஐ கிளீன் மொபிலிட்டி நிறுவனம்’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோன்ட்ரா என்ற 3 சக்கர மின் வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (டிஐஐ), கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும், முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். நாட்டிலேயே சைக்கிள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. முருகப்பா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான டிஐ கிளீன் மொபிலிட்டி நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாக
னங்களை தயாரிக்க திட்டமிட்டது.

இதையடுத்து, அம்பத்தூரில் உள்ள டிஐ சைக்கிள்ஸ் வளாகத்தில், ரூ.140 கோடி முதலீட்டில் 580 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் டிஐகிளீன் மொபிலிட்டி நிறுவனத்தின் மோன்ட்ரா என்ற வணிகப் பெயரிடப்பட்ட 3 சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட ஓராண்டிலேயே இந்த உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் மோன்ட்ரா 3 சக்கர மின்வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி, டிஐ நிறுவன தலைவர் அருண் முருகப்பன், டிஐ கிளீன் மொபிலிட்டி நிறுவன இயக்குநர் கல்யாண்குமார் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.