ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4 லட்சம் என கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஆந்திராவில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஸ்ரீசைலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தனது முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீசைலம் அணையின் 10 மதகுகளும் 15 அடி வரை உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 லட்சத்து 37,792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
10 மதகுகளிலும் பெரும் சத்தத்துடன் தண்ணீர் விழுந்து எழுவது விழிகளுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் அணைக்கு இதுவரை 1,105 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 5வது முறையாக ஸ்ரீசைலம் அணை திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 23, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் அணை திறக்கப்பட்டுள்து. ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அதன் கீழ்ப்பகுதியில் உள்ள நாகர்ஜுனா சாகர் அணைக்கு அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகர்ஜுனா சாகர் அணையும் நிரம்பி வழிகிறது.