ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் கபடி போட்டிகளில், இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் முதியவர்கள் அணி இளைஞர்கள் அணிக்கு சவால் விடும் வகையில் இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஊரக ஒலிம்பிக் போட்டிகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் உள்ள 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
9 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும்
இதில் கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் அடங்கும். மாநிலம் முழுவதும் பல்வேறு வயது வரம்பு பிரிவில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த விளையாட்டு போட்டிகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விளையாடுவதற்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர். ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் இந்தப்போட்டிகள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
டிரெண்ட் ஆகும் கபடி வீடியோ
போட்டி நடக்கும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக கிராம மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், கோ கோ, கபடி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு கபடி போட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி கொண்டு இருக்கிறது. கபடி போடியில் வைரல் ஆவதற்கு என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா..
இளைஞர்களுக்கும்-முதியவர்களுக்கும்
வழக்கமாக கபடி போட்டி என்றால் இளைஞர்கள் தங்கள் பலத்தையும் சாதுர்யத்தையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக இருக்கும். ஆனால், இந்தப்போட்டி இளைஞர்கள் ஒரு அணியாகவும் முதியவர்கள் ஒரு அணியாகவும் நடைபெறுகிறது. இதிலும் முதியவர்களை சமாளிக்க முடியாமல் இப்போதுல்ல இளைஞர்கள் போராடுவதுதான் இந்த வீடியோ டிரெண்ட் ஆவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு தண்ணி காட்டிய முதியவர்கள்
சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், இளைஞர்கள் ஒரு அணியாகவும்.. 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதான முதியவர்கள் ஒரு அணியாகவும் மோதிக்கொள்கின்றனர். இதில் முதியவர்கள் அணி சார்பாக ரெய்டு போகும் முதியவர் ஒருவர் ‘ரியல் கபடி பிளேயர் போல படு ஆக்டிவாக ஸ்டெப் போட்டு செல்வது’ அங்கிருந்தவர்களின் கைத்தட்டுகளை பெறுகிறது. இதேபோல் மற்றொரு முதியவர் ரெய்டு சென்று இளைஞர்களுக்கு தண்ணி காட்டியதோடு, ஒரே ரெய்டில் அலேக்காக 3 இளைஞர்களை தூக்கி வந்தது போட்டியை கண்டுகளித்த மக்களிடையே பலத்த கர ஓசைகளை பெற்றது.
முதியவர்களுக்கு பாராட்டு
50 வயது ஆன பிறகே கை, கால் வலி என்றும் மூட்டு வலி என்றும் வீட்டில் இருந்து வரும் முதியவர்களுக்கு மத்தியில் களத்தில் இறங்கி இளைஞர்களையே திக்கு முக்காட வைத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் தெரிவித்துள்ள பலரும் முதியவர்கள் அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த வயதில் எப்படி இவ்வளவு ஆக்டிவாக இருக்கின்றனர் என்று வியந்து வருகிறார்கள்.
அசோக் கெலாட் பேச்சு
ஊரக அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டிகள் குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ”நமது நாட்டில் 135 கோடி மக்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய தேசமாக இருந்தாலும் பதக்கங்கள் வெளிநாடுகளுக்கே செல்கின்றன. இது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த வலியை மனதில் வைத்தே இந்த புதிய துவக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகளில் திறமையான விளையாட்டு வீரர்கள் நமக்கு கிடைப்பார்கள். அவர்களை தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடும் அளவுக்கு ஊக்கப்படுத்துவோம்” என்றார்.