புதுடெல்லி: ரூ.12 ஆயிரத்துக்கு கீழ் விலையுள்ள சீன செல்போன்கள் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதிலும் சீன நிறுவனங்களின் போன்கள் விற்பனை ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத செல்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பதால், இந்திய செல்போன் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதனால் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 12 ஆயிரம் ரூபாய் விலைக்கு குறைவான உள்ள சீன செல்போன்களை தடை செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ‘நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு.
ஆனால் அது வெளிநாட்டு தயாரிப்புகளை விலக்குவது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க சில சீன ெசல்போன் நிறுவனங்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவற்றின் விநியோகச் சங்கிலி, மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ரூ.12,000க்கு குறைவான செல்போன்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இந்தியாவில் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தற்போது 76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இவற்றை 2025-26ம் ஆண்டிற்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளை உருவாக்குவது இந்திய அரசாங்கத்தின் கட்டாய கடமை என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.