கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? அவருக்கு உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது எப்படி? என்ற புதிருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் மாணவியின் உடலில் செய்யப்பட்ட இரண்டு பிரேத பரிசோதனை தொடர்பான ஜிப்மர் ஆய்வறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆய்வறிக்கையை நீதிபதி மாணவியின் பெற்றோரிடம் வழங்கவில்லை.
மாறாக ஜிப்மர் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை மட்டும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளந்திரையன்
இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டு இருந்தார். 26ம் தேதி அவர் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில் நேற்று இதில் பல நிபந்தனைகளை விதித்தார். ஜாமீன் பெற்றவர்கள் மதுரையை விட்டு வெளியே செல்ல கூடாது, தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதன் பின் அவர் இந்த வழக்கு தொடர்பாக சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
ஜாமீன்
முக்கியமாக ஜிப்மர் மருத்துவ குழு அறிக்கை அடிப்படையில் சில முக்கியமான கருத்துக்களை அவர் வெளியிட்டார். அந்த மாணவியின் உடலில் காயங்கள் இருந்தன. வயிற்றுப்பகுதியிலும், மற்ற சில இடங்களிலும் காயங்கள் இருந்தன. மாணவியின் உடலில் இருந்த காயங்கள் எப்படி வந்தது என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதன் காரணமாகவே மாணவி துன்புறுத்தப்பட்டதாக அந்த மாணவியின் பெற்றோரும் தெரிவித்தனர்.
காயம்
உடலில் காயங்கள் இருப்பதால் அவர் ஏற்கனவே கொல்லப்பட்டு அதன்பின் மாடியில் இருந்து வீசப்பட்டு இருக்கலாம் என்று கூறினர். ஆனால் நேற்று நீதிபதி ஜிப்மர் அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணை அடிப்படையில் தெரிவித்த கருத்தில், மாணவிக்கு உடலில் காயம் ஏற்பட்டது மரத்தில் மோதியதால். மாடியில் இருந்து கீழே விழுந்த போது அவர் மரத்தில் மோதியதால் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுவே காயத்திற்கு காரணம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மரத்தில் மோதியது
அதோடு அவரின் உடல் மரத்தில் மோதிய போது ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உடையில் பல இடங்களில் ரத்தம் வந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல நாட்களாக அவரின் உடல் காயங்கள் தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. அதோடு மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை காரணம் இல்லை. அவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.
தற்கொலை
அதோடு மாணவியை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்ல. நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவது ஆசிரியரின் பணி. அதை தற்கொலைக்கு தூண்டுவதாக அர்த்தம் கொள்ள கூடாது. மாணவி வேதியியல் பாடத்தில் சரியாக படிக்காமல் ஏற்பட்ட பிரஷர் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார். அவரை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என்று நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மொத்தமாக விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.