நாகை: கீழ்திசைநாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று முதல் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதா குளம், பேராலயத்தின் மேல்கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு வழிபாடு நடக்கிறது.
7ம் தேதி திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள்ஜெபம் நடக்கிறது. அன்று மாலை பெரிய தேர் பவனி நடக்கிறது. 8ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை கொடியிறக்கப்பட்டு பேராலய ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.