26 ஆண்டுகள் தன்னந்தனியே வாழ்ந்த.. அமேசான் காட்டின் கடைசி மனிதர் மரணம்.. மானுடவியல் ஆர்வலர்கள் சோகம்!

பிரேசிலியா: அமேசான் காட்டில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்த, ஒரு பழங்குடியின குழுவின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்ட சோகமான தகவல் தெரிய வந்துள்ளது.

தன் பேச்சுத்துணைக்குக்கூட யாருமே இல்லாமல், உங்கள் மொழியை, இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லாமல் ஒரு தீவில் அல்லது காட்டில் தனித்து விடப்பட்டால் என்ன செய்வீர்கள்? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதல்லவா? ஆனால், சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி ஒரு தனிமையான வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார் அமேசான் காட்டைச் சேர்ந்த பழங்குடியின மனிதர் ஒருவர்.

பிரேசிலில் உள்ள ரோண்டோனியா பகுதியில் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்தவர்தான் Índio do Buraco அல்லது “பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்” என்று குறிப்பிடப்படும் அந்த மனிதர்.

தனியே தன்னந்தனியே

1950-60 களில் பிறந்தவராக கருதப்படும் இவர், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த அமேசான் காட்டில், கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். இவருடன் இருந்த மற்ற பழங்குடியின மக்கள், 1980-95 காலகட்டத்தில் காடுகளைச் சுற்றி இருந்த, அக்கம்பக்கத்து கிராம மக்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கொலைகார கும்பலிடம் இருந்து இந்த பதுங்குகுழியின் பழங்குடி மனிதர் மட்டுமே தப்பித்துள்ளார்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

தன் இனத்தைச் சேராத மற்ற மக்களால் அவர் அனுபவித்த கொடுமைகள் மற்றும் தன் சக இனமக்களுக்கு நேர்ந்த துயரங்களைக் கண்கூடாக பார்த்ததால், அவருக்கு மற்ற மனிதர்கள் மீதான நம்பிக்கையே போயிருக்க வேண்டும். எனவே தான் அவரை தனிமை வாழ்வில் இருந்து மீட்க, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு அரசு எவ்வளவோ முயன்றும் தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வர மறுத்துவிட்டார் தற்போது மரணித்துள்ள அந்த நபர்.

பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்

பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்

காடுகளை சீர்படுத்தி சோளம் மற்றும் பப்பாளி விளைவித்து அவர் தன் வாழ்வை நடத்தியுள்ளார். தான் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு மரம் வெட்டுவது, உணவுக்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது போன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஆறு அடி ஆழமுள்ள குழிகளை வெட்டி, அதையே தன் வாழ்விடமாக அவர் பயன்படுத்தி வந்துள்ளார். அதனாலேயே அவரை பதுங்குகுழியின் பழங்குடி மனிதர் (Man of the hole) என ஊடகங்கள் குறிப்பிடத் தொடங்கின.

முதல் வீடியோ

முதல் வீடியோ

கடந்த 2018ம் ஆண்டுதான் அவரைப் பற்றிய வீடியோவை தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டதன் மூலமே, இப்படி ஒரு மனிதர் தன்னந்தனியாக வசித்து வருகிறார் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இந்த வீடியோவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, எடுக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியிடப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

தாக்க முயற்சி

தாக்க முயற்சி

தன்னை நெருங்கும் மற்ற மனிதர்களை, அவர் அம்புகள் கொண்டு தாக்க முயற்சித்ததால், யாராலும் அவரை நெருங்க இயலவில்லை. எனவே அவருக்கும் தெரியாமலேயே அவரைப் பாதுகாக்கும் முயற்சிகளை பிரேசில் அரசு மேற்கொண்டு வந்தது. ஆவணப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களுக்காக அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கடுமையாக எச்சரித்திருந்தது பிரேசில் அரசு.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இருந்தபோதும், அவ்வப்போது அந்நபரின் வீடியோக்கள் உள்ளூர் ஊடகங்களில் அதிகம் காட்டப்பட்டது. அவரைப் பற்றிய ஆவணப்படங்களும் நிறைய வெளிவந்தது. இந்நிலையில்தான் இம்மாதம் 23ம் தேதி, அந்நபரின் உடல்நிலையைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் ஃபுனாய் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் அவரது பதுங்குகுழியில் அவர் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

இயற்கையான மரணம்

இயற்கையான மரணம்

அவரது சடலம் இருந்த இடத்தில் வன்முறை நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லாததால், அவர் இயற்கையான முறையிலேயே இறந்திருக்கலாம் என ஃபுனாய் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு, தன் மரணத்தை முன்கூட்டியே அவர் அறிந்திருக்க வேண்டும், அதனாலேயே பறவையின் இறகுகளால் அந்த இடத்தை நிரப்பி இருக்கிறார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வருத்தம்

வருத்தம்

ஒரு பழங்குடி இனத்தின் கடைசி மனிதர் இறந்துவிட்டது மானுடவியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடவே, ‘பிரேசிலிய அமேசான் பழங்குடியினர் அனைவரையும் இழந்துவிட்டதாக’ வருத்தம் தெரிவித்து வரும் அவர்கள், ‘இந்த இழப்பு ஒட்டுமொத்த கலாச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்’ எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.