தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டிருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை. ஒரே சமயத்தில் திரை பயணத்தை தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்த இரண்டு நடிகர்களும் தமிழ் திரையுலகில் கோலூன்றி ஆட்சி செய்து வருகின்றனர். விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகும் நாளன்று மொத்த திரையரங்குகளுமே விழாக்கோலமாக காட்சியளிக்கும். கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது, மாலை போடுவது, வெடி வெடிப்பது, மேளதாளம் என அந்த நாளை ரசிகர்கள் திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். உண்மையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் நல்ல நண்பர்கள், ஆனால் அவர்களது ரசிகர்களோ ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொண்டு சமூக வலைத்தளங்களை அடிக்கடி போர்க்களமாக மாற்றி வருவது இன்றளவும் தொடர்கதையாக தான் இருந்து வருகின்றது.
தற்போது கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2002-ல் ப்ரண்ட்ஸ் – தீனா, 2003-ல் திருமலை – ஆஞ்சநேயா, 2007-ல் போக்கிரி – ஆழ்வார், 2014-ல் ஜில்லா – வீரம் போன்ற படங்கள் ஒரே தினங்களில் மோதிக்கொண்டு திரையரங்குகளை தெறிக்கவிட்ட நிலையில் தற்போது விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படமும், அஜித் நடிக்கும் ‘ஏகே61’ படமும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தை 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக முன்னரே படக்குழு அறிவித்து இருந்தது.
ஆனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ஏகே61’ படத்தை படக்குழு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது படக்குழு தனது முடிவை மாற்றியுள்ளதாக தெரிகிறது. கோவிட் தொற்று போன்ற பலவித சந்தர்ப்ப சூழ்நிலையால் படத்தின் பணிகளை திட்டமிட்ட்டபடி முடிக்கமுடியாத காரணத்தினால் படத்தை ஜனவரி மாதத்தின் பாதியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிறிய போரை தொடங்கிவிடுவார்கள்.