சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம் படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.
முக்கியமான சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை அதிர வைத்தது. அதிரடி காட்டியது. அடுத்த பாகத்தில் இந்தக் கேரக்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட உள்ளது.
விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது விக்ரம். இந்த படம் மிரட்டலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சர்வதேச அளவில் வரவேற்பு
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக வெற்றிகரமாக ஓடியது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில், சர்வதேச அளவிலும் படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை இந்தப் படம் எட்டியுள்ளது.
சிறப்பான காயத்ரி கேரக்டர்
காயத்ரி, மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் சிறியதாக இருந்தாலும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அழகாக வந்து இடையிலேயே கொலை செய்யப்பட்ட காயத்ரி கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்தது.
சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர்
இந்நிலையில், இந்தப் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டியிருந்தார் சூர்யா. இந்தப் படத்தில் சில நிமிடங்களே நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் தற்போதும் பேசப்படுகிறது. சூர்யா இதுபோல கூட நடிப்பாரா என அனைவரையும் கேட்க வைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா கேரக்டர்தான் பிரதானமாக அமையவுள்ளது.
90 நாட்களை கடந்த விக்ரம்
இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. தொடர்ந்து 100வது நாளை நோக்கிய பயணத்தில் சிறப்பாக நடைபோட்டு வருகிறது. ஓடிடியில் வெளியான போதிலும் திரையரங்குகளில் படத்தின் ஓட்டத்தை யாராலும் தடை செய்ய முடியவில்லை.