விக்ரம் நடிப்பில், வெளியாகவுள்ள படம் ‘கோப்ரா’. ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘கே.ஜி.எஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், பத்மப்பிரியா, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தரஞன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை (ஆகஸ்ட் 31) இப்படம் திரையரங்குகளில் வெளியாவதைத் தொடர்ந்து படக்குழு புரோமோஷன் வேளைகளில் ஈடுப்பட்டு வந்தது. இதனிடையே நடிகர் விக்ரமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.
அப்படி ஹைதராபாத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமிடம், பாலிவுட்டில் பாய்காட் (புறக்கணிப்பு) பிரசாரத்தால் சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் பாதிப்பு குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “‘பாய்காட்’ என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
சமீபகாலமாகவே சில திரைப் பிரலங்களும் அவர்கள் நடித்த படங்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஆமிர் கானின் ’லால் சிங் சத்தா’, அக்ஷய் குமாரின் ’ரக்ஷா பந்தன்’, விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்த நிலையில், இதற்குக் காரணம் ‘பாய்காட் லால் சிங் சத்தா’, ‘பாய்காட் ரக்ஷா பந்தன்’, ‘பாய்காட் லைகர்’ என்ற சமூக வலைதள பிரசாரம் எனக் கூறப்பட்டது.
இதை முன்வைத்துதான் விக்ரமிடம் அக்கேள்வி எழுப்பட்டது. “எனக்கு boy-ன்னா என்னன்னு தெரியும். Girl-ன்னா என்னன்னு தெரியும். Cot என்பதுகூட எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் ‘பாய்காட்’-ன்னா என்னன்னு எனக்குத் தெரியாது” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார் நடிகர் விக்ரம்.