FACT CHECK: கீழக்கரை அங்கன்வாடி மையத்தில் தீண்டாமை சுவரா… உண்மை என்ன?!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய ரீதியாக குழந்தைகள் பிரித்து அமர வைக்கப்பட்டு குறுக்கே தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக தினசரி பத்திரிகை ஒன்றில் இன்று செய்தி வெளியானது. இந்த செய்தி ராமநாதபுரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்தத் தகவலை விகடனின் Fact check-க்கு உட்படுத்தினோம்.

இது குறித்த உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக கீழக்கரையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்றோம். அந்த அங்கன்வாடி மையத்தில் குறுக்கே சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கட்டடத்துக்கு வெளியே அண்ணா நகர் மற்றும் முத்துசாமிபுரம் அங்கன்வாடி மையம் என்று தனித்தனியாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அங்கன்வாடி மைய கட்டடத்தின் உள்ளே சுவர் எழுப்பப்பட்டு இரு அறைகளாக இருந்தாலும் குழந்தைகள் ஒரே அறையிலேயே அமர்ந்து விளையாடிக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

இது தொடர்பாக அங்கு பணியிலிருந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் லீமா ராணியிடம் பேசினோம். “காலையிலிருந்து அனைத்து அதிகாரிகளும் இந்த செய்தி தொடர்பாகத்தான் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு பிரச்னையே இங்கு கிடையாது.

அங்கன்வாடி மைய பெயர் பலகை தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது

‘கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு, கூரை கட்டடங்களில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் செயல்படக்கூடாது’ என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அண்ணா நகரில் கூரை கட்டடத்தில், அதுவும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் வேறு கட்டடத்திற்கு மாற்றுவதற்காக இடம் தேடினார்கள், முத்துச்சாமிபுரம் அங்கன்வாடி மையம் பெரிய கட்டடத்தில் இயங்கி வந்ததால், அதனை இரண்டாகப் பிரித்து ஒருபுறம் அண்ணா நகர் அங்கன்வாடி மையம் மறுபுறம் முத்துசாமிபுரம் அங்கன்வாடி மையம் என 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நாங்களே இந்த சுவர் இருப்பதை விரும்பவில்லை, ஆனால் அங்கன்வாடி மையத்தை பிரித்து காட்ட வேண்டும் என்பதற்காக அரசு இவ்வாறு செய்துள்ளது. இரு அங்கன்வாடிகளிலும் சேர்த்து 30 குழந்தைகள் உள்ளனர். இதில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளும் உள்ளனர். இவர்களை எந்த வேறுபாடும் இன்றி சமமாக பார்க்கிறோம்.

இரு மையத்தில் இருக்கும் குழந்தைகளும் இரு அறைகளுக்கும் சென்று ஓடி விளையாடுவார்கள். மின்சார வசதி என அனைத்தும் உள்ளது. ஆனால் இப்படி ஒரு தவறான செய்தியை வெளியிட்டு எங்களை திண்டாட விட்டுள்ளனர். காலையில் குழந்தைகளைவிட அந்த பெற்றோர்கள் எங்களிடம் இந்த செய்தி தொடர்பாக ஆச்சர்யமாக கேட்டனர். மாவட்ட ஆட்சியர், அங்கன்வாடி உயர் அதிகாரிகள், போலீஸார் அனைவரும் வந்து இப்படி ஒரு பிரச்சனையை இங்கு யார் கிளப்பியது என விசாரித்தனர்” என்றார்.

அங்கன்வாடி மேற்பார்வையாளர் லீமா ராணி

இது தொடர்பாக முத்துசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, “எங்கள் பகுதியில் கோயில் திருவிழா தொடங்கியுள்ளது. ஏழு நாள்களுக்கு இதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என ஊர்கூடி முடிவு செய்திருக்கிறோம்” என்றபடி நழுவினர். பெயர் குறிப்பிட வேண்டாம் என பேசிய அண்ணாநகரை சேர்ந்த ஒருவர், “அங்கன்வாடி மையம் இயங்கி வரும் சமுதாய கூடத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் பிரச்னையை அங்குள்ள சிலர் உருவாக்கி வருகின்றனர்” என்றார்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் விஸ்வாபதியிடம் விளக்கம் கேட்டோம். “கீழக்கரை நகராட்சியில் 15 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு 110 விதியின் கீழ் அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டடங்கள் குடிசைகளில் இயங்கக் கூடாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது அண்ணா நகரில் வாடகை குடிசை கட்டடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம், முத்துச்சாமிபுரத்தில் பெரிய சமுதாய கூட கட்டடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

அந்த இரு அங்கன்வாடிகளுக்கும் தனித்தனி ஊழியர்கள், தனி அங்கன்வாடியாக இயங்கினால் என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ, அதேபோல் ஒரே கட்டடத்தில் இயங்கி வந்தாலும் இரு அங்கன்வாடிகளுக்கும் தனித்தனி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடியில் விளையாடும் குழந்தைகள்

அதனைப் பிரித்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நடுவே சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் எழுப்பி 12 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது திடீரென இந்தப் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம், அந்த சமுதாய கட்டடத்தை காலி செய்யுமாறு சிலர் எங்களை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அதனை நாங்கள் மறுத்து வருகிறோம். மேலும் அந்த அங்கன்வாடிக்கு சமீபத்தில் தண்ணீர் பைப் அமைக்கப்பட்டதையும் சிலர் உடைத்திருக்கின்றனர். தற்போது எங்களை காலி செய்யவைக்க இது போன்ற தவறான செய்தியை பரப்புகிறார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் பேசினோம். “அங்கன்வாடி மையத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டிருப்பதாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. நான் இது குறித்து விசாரிக்கையில் அதுபோன்ற எந்த பிரச்னையும் அங்கு கிடையாது.

இந்த தவறான செய்தியை பரப்பி, சமுதாய ரீதியிலான பிரச்னைகளை தூண்டியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

விகடன் Fact Check-ன் அங்கமாக நாம் மேற்கொண்ட கள விசாரணையில், குறிப்பிட்ட அங்கன்வாடியில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பொய் என்பது தெரியவந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.