அஞ்சல சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடை தருவதோடு தற்போது வங்கிகளின் நிலையான வைப்புத் தொகையை காட்டிலும் அதிகப்படியான வட்டியை வழங்குகின்றன.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை அண்மையில் உயர்த்தியது.
இதனால் வங்கிகளும் வட்டி வீதத்தை உயர்த்த தயாராகிவருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி 6.10 சதவீதமும், எஸ்பிஐ 5.65 சதவீதமும், ஐசிஐசிஐ 6.10 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 6.05 சதவீதமும் வட்டி வீதத்தை வழங்குகின்றன.
இந்த வட்டி வீதங்கள் அஞ்சல சேமிப்பு திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) ஆகியவற்றை விட குறைவாகவே உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
முதியவர்களுக்கான இந்த அஞ்சல சேமிப்பு திட்டத்தில் வருடாந்திர வட்டியாக 7.4 சதவீதம் வழங்கப்படுகிறது. இது வங்கி வழங்கும் வைப்புத் நிதி வட்டியை விட கணிசமான உயர்வு ஆகும்.
இந்தத் திட்டத்தில் 60 வயதை கடந்தவர்கள் மனைவியுடன் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தப்பட்சம் ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் 1961 சட்டப்பிரிவின் கீழ் 80சி திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்டது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் மொத்த வட்டி இருந்தால் TDS பிடித்தம் உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் வரிச் சலுகை பெறும் திட்டம் ஆகும். ஆகையால் இது முதலீட்டாளர்களுக்கு உரிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ரூ.500 செலுத்தி இந்தத் திட்டத்தில் அஞ்சல சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இதில் 7.1 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு அதிகப்பட்சமாக ரூ.150000 வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம் ஆகும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைள் பொருளாதார பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் ஒரு பெற்றோர் இரு பெண் குழந்தைகள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம்.
ஆண்டுக்கு 7.6 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
குறைந்தப்பட்சம் ரூ.25 முதல் ஆண்டுக்கு ரூ.150000 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பெண் குழந்தைக்கு 18 வயது வரை, கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை பாதுகாவலரே மேற்கொள்வார்; அதன் பிறகு, முதலீட்டாளர் சுதந்திரமாக கையாளலாம்.
18 வயதிற்குப் பிறகு அல்லது 10 ஆம் வகுப்பை முடித்த பிறகு, அதிகபட்சமாக 50% கணக்கு இருப்புத் தொகையை ஓரளவுக்கு மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறார். கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கடந்துவிட்டால் அல்லது 18 வயதுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை திருமணம் செய்துகொள்ளும் போது, முதிர்வுத் தொகையைப் பெற்றுக் கணக்கை முடித்து கொள்ளலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் கணக்குகள் நிறுவப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத செலவுகளுக்கு முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“