சமீபத்தில்தான் இந்தியாவில் 5G சேவையை அறிமுக படுத்துவதற்கான அலைக்கற்றை ஏலம் முடிந்தது. ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியாவில் 5G சேவை அறிமுகமாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தீபாவளியை ஒட்டி இந்தியாவின் சில முதன்மை நகரங்களில் 5G சேவை அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி.
நடந்து முடிந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகமான ஏலத்தை 88,078 கோடி செலவு செய்து எடுத்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ப்ரீமியம் 700MHz பேண்ட் ஜியோவிடம்தான் உள்ளது. மொத்தமாக 24,740MHz 5G அலைக்கற்றையை தன்வசப்படுத்தி வைத்துள்ளது ஜியோ. எனவே 700MHz, 800MHz, 1,800MHz, 3,300MHz, and 26GHz பேண்ட்களை ஜியோவால் பயன்படுத்த முடியும்.
இதுவே இந்தியாவில் முதன் முதலில் 5G சேவையை அளிப்பதற்கான வாய்ப்பை ஜியோவுக்கு வழங்கியுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ஆவது வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி இந்தியாவுக்கு ஜியோவின் தீபாவளி பரிசாக சில முக்கிய நகரங்களில் 5G சேவையை அறிமுகப்படுத்த படுத்த போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர் 2023க்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்கள் உட்பட மூலை முடுக்குகளில் 5G சேவையை அறிமுகப்படுத்தி விடுவோம் என்றும் உறுதி கொடுத்துள்ளார். இந்தியாவில் 5G சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு தீபாவளி அன்று மெட்ரோ நகரங்களான கொல்கத்தா,டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் உட்பட ஒரு சில நகரங்களில் 5G சேவையை வழங்க இருப்பதாக அம்பானி அவர்கள் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 5G சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உருவாக்குவதற்காக ஜியோ qualcomm மற்றும் கூகுள் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது. அதே போல் இந்தியா முழுவதும் உள்ள 11லட்சம் கிலோமீட்டர் வழித்தடத்தில் ஆப்டிக்கல் பைபர் பதிப்பதற்கான பணியில் ஜியோ வேகமாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையிலேயே இந்தியாவில் மூன்றில் இரண்டு வீடுகளில் ஜிவ் பைபரை தான் மக்கள் தேர்வு செய்கிறார்கள் என்றும் இதன் மூலம் ஜியோவை கடைகோடிக்கும் கொண்டு போக முடியும் என தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
– சுபாஷ் சந்திரபோஸ்